இது மதுரை தீபாவளி | வாணவேடிக்கையில் ஜொலித்த தூங்கா நகரம்

இது மதுரை தீபாவளி | வாணவேடிக்கையில் ஜொலித்த தூங்கா நகரம்
By: TeamParivu Posted On: November 13, 2023 View: 26


மதுரை: 
தீபாவளி பண்டிகை நாளில் சற்று வித்தியாசமாக வானில் வாண வேடிக்கை சத்தங்களுடனும், பட்டாசு வெடிகளாலும் ஜொலித்தது தூங்கா நகரமான மதுரை.

நாடு முழுவதும் இனம், மொழி, மதம், பண்பாடு, கலாச்சாரத்தை தாண்டி அனைத்து தரப்பு மக்களும் தீபாவளி பண்டிகையை விரும்பி கொண்டாடி வருகிறார்கள். ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் கொண்டாடப்படும் ஆன்மிக நகரான மதுரையில் தீபாவளி பண்டியையையும் மக்கள் பெரும் உற்சாகத்துடன் வாணவேடிக்கைளை நிகழ்த்தி, விதவிதமான பலகாரங்கள் தயார் செய்தும் புத்தாடைகள் அணிந்தும் கொண்டாடி தீர்த்தனர். வேலை, படிப்பு நிமித்தமாக வெளியூர்களில் தங்கியிருந்தவர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி குடும்பத்தினரும் தீபாவளியை கொண்டாடினார்கள்.

ஓராண்டுக்குள் திருமணம் செய்தவர்கள், தலை தீபாவளி கொண்டாடினார்கள். தீபாவளி பண்டிகை நாளான நேற்று காலை வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து வீடுகளில் தயாரித்த பாலகாரங்களை சாப்பிட்டனர். உறவினர்கள், நண்பர்கள், மாற்று மதத்தினருக்கு தீபாவளி பலகாரங்களை வழங்கி ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தனர்.

மீனாட்சியம்மன் கோயில், அழகர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், கே.கே.நகர் பூங்கா முருகன் கோயில் போன்ற தங்களுக்கு விரும்பிய கோயில்களுக்கு சென்று வழிப்பட்டனர். மதியம் கறி விருந்து சாப்பிட்டு மாலை முதல் வீட்டின் முன் குடும்பத்தோடு குதூகலமாக பட்டாசு வெடித்த மகிழ்ந்தனர். குழந்தைகள், மத்தாப்பு, வெடிச் சத்தம் எழுப்பாத சிறிய ரக பட்டாசுகளை வெடித்தனர். பெரியவர்கள், இளைஞர்கள், வானம் வர்ணஜாலம் கொட்டும் பெரிய ரக வெடிகளை வெடித்தனர்.

இந்த ஆண்டு, குழந்தைகளை கவர்ந்த புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்கு வந்திருந்தன. ஒரே கம்பி மத்தாப்பில் 4 வர்ணங்கள் வரும் கம்பி மந்தாப்பு, கிரிக்கெட் பேட், சிங்கம், டைனோசர், மீன், தேனீ, கிண்டர் ஜாய், லாலி பப் போன்ற பட்டாசுகளும் விற்பனைக்கு வந்திருந்தன. அந்த பட்டாசுகளை விரும்பி வாங்கி குழந்தைகள் பட்டாசு வெடித்தனர். பேப்பர் பாம்ஸ் என்ற பட்டாசு வெடித்த பின், அதில் இருந்து ஏராளமான சிவப்பு நிற பேப்பர்கள் மின்னி சிதறும்.

இந்த ரக பட்டாசுகளை மக்கள் அதிகம் வாங்கி வெடித்தனர். இது தவிர, கோல்டு மைன் வெடிக்கும் போது வானில் சென்று தங்க காசுகள் கொட்டுவது போல் வெடித்து சிதறும் கோல் மைன் பட்டாசு, தரையில் பற்ற வைத்தவுடன் கிழே இருந்து வானில் செல்வது கூட தெரியாமல் விருட்டென மின்னலாய் சென்று வானில் வர்ண ஜாலம் காட்டும் ஆப்ரிக்கன் தண்டர் வெடிகள்,பற்ற வைத்தவுடன் வானில் சென்று வெடித்து தொடர்ச்சியாக சிவப்பு, பச்சை, பர்பிள், ஒயிட், சில்வர், கிராக்லிங், வயலட் வர்ணங்களில் வெடித்து சிதறி பார்ப்போரை பரவசப்படுத்தும் செவன் ஒண்டர்ஸ் வெடிகள், தீபாவளியை நினைவுப்படுத்தும் தீபம் வெடிகள், சத்தமில்லாமல் வானில் சென்று வண்ண வண்ண நிறங்களாக சிந்தும் டஸ்கர் வெடிகள், வானில் மின்னல் போல் ஒளி தோன்றி மறையும் சில்வர் கோஸ்ட் போன்ற பல்வேறு ரக பட்டாசுகள் இந்த ஆண்டு தீபாவளியை அலங்கரித்தன. மதுரை தூங்கா நகரம் என்பதால் வழக்கமாகவே மக்கள், இரவு, பகலாக உழைப்பார்கள்.

இரவு முழுவதும் அரசு பஸ்கள், சரக்கு வாகனப் போக்குவரத்தும் இயங்கி கொண்டிருக்கும். தீபாவளி பண்டிகை நாளில் சற்று வித்தியாசமாக வானில் வாண வேடிக்கை சத்தங்களும், பட்டாசு வெடிகளால் ஜொலித்த நகரமும் இன்னும் மதுரையை அழகாக்கின. வைகை ஆற்றின் கரையோரம் மீனாட்சியம்மன் கோயிலின் உயரமான கோபுரங்களாலும் காணப்படும் மதுரை இயல்பாகவே இரவு நேரங்களில் மின்னொளிகளில் அலங்கரிக்கப்பட்டது போன்று காணப்படும். நேற்று தீபாவளி பண்டிகை என்றால் மக்கள் நிகழ்த்திய வாணவேடிக்கையால் நகரமே இரவு முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

வைகை கரை நகரப் பகுதியில் நிகழ்த்திய வாண வேடிக்கையால் மீனாட்சியம்மன் கோயில் பின்னணியில் மதுரை நகரத்தை தொலைவில் இருந்து பார்த்தவர்களுக்கு கண்கொள்ளா காட்சியையும், பரவசத்தையும் ஏற்படுத்தியது. பட்டாசு வெடிக்காதவர்கள் கூட, தங்கள் வீடுகள் முன் நின்றும், மாடிகள் மீது நின்றும் மற்றவர்கள் வெடித்த விதவிதமான பட்டாசு வெடிகள் ஏற்படுத்திய ஒளிகளையும், ஜொலித்த வானத்தையும் பார்த்து ரசித்தனர்.

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..